அந்தரங்கம் – திரை விமர்சனம்
சிவப்பு விளக்கு பகுதி ஏஜெண்டாக இருக்கும் ரமேஷ், அப்பாவியான மோகனாவை காதலிப்பது போல் நடித்து வலையில் விழவைக்கிறான். திருமணம் செய்வதாக ஏமாற்றி விபசார விடுதி நடத்தும் சரசாவிடம் விற்கிறான். அங்கிருந்து தப்பிக்க போராடுகிறாள். “எய்ட்ஸ்” இருப்பதாக சொல்லி கற்பை காப்பாற்றுகிறாள்.
பிறகு போலீஸ் உதவியோடு தப்புகிறாள். பத்திரிகையில் வேலைக்கு சேர்ந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை தொடராக எழுதுகிறாள்.
அப்போது பணத்துக்கு பெண்களுடன் செல்லும் மதனுடன் பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் ஒரே வீட்டில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். நட்பாக பழகுகிறார்கள். மதனை போலீஸ் தேடுகிறது. அவனை பிடித்து கொடுக்க மோகனாவும் முயற்சிக்கிறாள். ஒரு கட்டத்தில் தன்னுடன் தங்கி இருப்பவன் தான் போலீஸ் தேடும் ஆண் விபசாரி என்பது தெரிய அதிர்கிறாள். அவனை போலீசில் பிடித்து கொடுத்தாளா என்பது கிளைமாக்ஸ்…
விபசாரத்தில் தள்ளப்படும் அபலை பெண்களின் வாழ்வை உருக்கமாகவும் கிறக்கமாகவும் காட்சிபடுத்தி உள்ளார் இயக்குனர் ஜே.வி. ருக்மாங்கதன். மோகனாவாக வரும் கமாலிகா விலை மாதர் விடுதியில் விற்கப்பட்டதும் என்ன ஆவாரோ என எதிர்பார்ப்பு எகிறுகிறது.
ஓவியன் பல லட்சங்கள் கொடுத்து மோகனாவை விலைக்கு வாங்கி போய் திருமணம் செய்ய விரும்புவதும் அதை நம்பி ஆடை இல்லாமல் அவன் வரையும் ஓவியத்துக்கு போஸ் கொடுப்பதும் அதை மறைவாக ஆள் வைத்து வீடியோவில் பதிவு செய்து மோகனாவை மிரட்டுவதும் எதிர்பாராத திருப்பங்கள்.
ஆண் விபசாரி மதனாக வரும் டான் கட்டுமஸ்தான உடல் வாகில் கவர்கிறார். பணக்கார பெண்களுடன் படுக்கையை பகிரும் சீன்கள் சூடேற்றும் ரகம். கமாலிகா, டான் இருவரையும் ஒரே வீட்டில் தங்க வைத்து வெவ்வேறு கோணத்தில் காட்சிகளை நகர்த்துவது கச்சிதம். சரசாவாக வரும் சிந்து, ரமேஷாக வரும் சஞ்சை வில்லத்தனம் செய்கின்றனர். முதல் சந்திப்பிலேயே ரமேஷின் காதலை கமாலிகா ஏற்பது நம்பும்படி இல்லை. கதையில் இன்னும் அழுத்தம் சேர்த்து இருக்கலாம். கவர்ச்சி பிரியர்களுக்கு விருந்து.

